இராமாநுச நூற்றந்தாதி - 7
மொழியைக்கடக்கும் பெரும்புகழான்* வஞ்சமுக்குறும்பாம்
குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண்கூடியபின்*
பழியைக்கடத்து மிராமாநுசன் புகழ்பாடி அல்லா
வழியைக்கடத்தல்* எனக்கினி யாதும் வருத்தமன்றே
குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண்கூடியபின்*
பழியைக்கடத்து மிராமாநுசன் புகழ்பாடி அல்லா
வழியைக்கடத்தல்* எனக்கினி யாதும் வருத்தமன்றே
மொழியைக் கடக்கும் | வாய்கொண்டு வருணிக்க முடியாதபடி வாசாமகோசரமான |
பெரு புகழான் | பெரிய புகழையுடையவரும் |
முக்குறும்பு ஆம் வஞ்சக் குழியை கடக்கும் | கல்விச்செருக்கு, செல்வச்செருக்கு, குலச்செருக்கு என்னும் மூவகைக் குறும்புகளாகிற படுகுழியைக்கடந்திருப்பவரும் |
நம் | நமக்கு நாதருமான |
கூரத்து ஆழ்வான் | கூரத்தாழ்வானுடைய |
சரண் | திருவடிகளை |
கூடியபின் | நான் ஆச்ரயித்த பின்பு |
பழியைக் கடத்தும் | ஸர்வபாப நிவர்த்தகரான |
இராமாநுசன் | எம்பெருமானாருடைய |
புகழ் பாடி | நற்குணங்களைப்பாடி |
அல்லாவழியைக் கடத்தல் | ஸ்வரூபத்திற்குச் சேராத தீயவழிகளைத் தப்பிப் பிழைக்கயானது |
எனக்கு | அடியேனுக்கு |
இனி | இனிமேலுள்ள காலமெல்லாம் |
யாதும் வருத்தம் அன்று | ஈஷத்தும் ப்ராயஸ ஸாத்யமன்றுல் [எளிதேயாம்] |
எம்பெருமானாரைத் துதிப்பதற்குத் தாம் யோக்யதையற்றவர் என்று பின்வாங்கப் பார்த்த அமுதனார், தமக்குள்ள ஆழ்வான் திருவடி ஸம்பந்தத்தை நினைத்து, இஃது இருக்கும்போது எனக்கு அஸாத்யமானது ஒன்றுமில்லையென்று துணிவு கொள்ளுகிறார் இதில். வாய்கொண்டு வருணிக்கமுடியாத பெரும் பகழ் படைத்தவரும், கல்வி, செல்வம், குலம் என்ற மூன்றுவகை ஸம்பத்தும் புஷ்கலமாயிருந்தும் அவற்றால் இறையும் அஹங்கார மடையாதவருமான கூரத்தாழ்வானுடைய சரணாரவிந்தங்களை ஆச்ரயித்து க்ருதக்ருத்யனான வெனக்கு எம்பெருமானாருடைய திருக்குணங்களைப் பாடுதலும் அதுவே காரணமாக அர்ச்சிராதிகதியொழிந்த மற்ற கதிகளிற் போகாதபடி அவ்வழியேபோதலும் மிகவுமெளிதேயாம் என்றாராயிற்று.
நம் பூருவாசாரியர்கள் எல்லாருமே சிறந்த புகழுடையராயினும் ஆழ்வானுடைய புகழ் அத்யந்த விலக்ஷணமென்பது ப்ரஸித்தமான விஷயம். நம் தர்சநத்துக்கு மஹாத்ரோஹியான நாலூரானுக்குக் கொடிய நரகங்களைக் கொடுக்க வேணுமென்று பகவத்ஸந்நிதியிலே ப்ரார்த்திக்கவேண்டியிருக்க, பேரருளாளன் திருமுன்பே வரதராஜஸ்தவத்தை விண்ணப்பம்செய்து கண்தெரியும்படி வரம் வேண்டிக்கொள்ளீர் என்ற ஸவாசார்ய நியமநத்தையும் அதிக்ரமித்து “நான் பெற்றபேறு நாலூரானும் பெறவேணும்” என்று வரம் வேண்டிக்கொள்ளும்படி விசாலமான திருவுள்ளம்பெற்ற ஆழ்வானுடைய புகழை நாம் என்சொல்வோம்! “மொழியைக் கடக்கும் பெரும்புகழான்” என்று சொல்லுவது தவிர வேறுவாசகமில்லைகாணும்.
[வஞ்சமுக்குறும்பாமித்யாதி] கல்விச்செருக்கு, செல்வச்செருக்கு, குலச்செருக்கு என்ற இம்மூன்று அஹங்காரங்கள் மிகக்கோடியவை; இவற்றைக் கடத்தல் ஆர்க்கும் அரிது; இவற்றைக் கடந்தவர் என்னும் ஏற்றம் ஆழ்வானொருவர்க்கே அஸாதாரணமென்பதாக எம்பெருமானார் காலத்திலேயே ப்ரஸித்தமாயிற்று. திருவாய்மொழியில் “பலரடியார்முன்பருளிய பாம்பணையப்பன்” என்றவிடத்து ஈடு முப்பத்தாறாயிரத்தில் ஆழ்வான் விஷயமாக அருளிச்செய்யப்பட்டதொரு ஐதீஹ்யம் குறிக்கொள்ளத்தக்கதாகும். மற்றும் பல இதிஹாஸங்களும் பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்