இராமாநுச நூற்றந்தாதி - 4
என்னைப்புவியிலொருபொருளாக்கி* மருள் சுரந்த
முன்னைப்பழவினைவேரறுத்து* ஊழிமுதல்வனையே
பன்னப்பணித்த விராமாநுசன் பரன்பாதமுமென்
சென்னித்தரிக்க வைத்தான்* எனக்கேதுஞ்சிதைவில்லையே.
இராமாநுச நூற்றந்தாதி - 4
என்னைப்புவியிலொருபொருளாக்கி* மருள் சுரந்த
முன்னைப்பழவினைவேரறுத்து* ஊழிமுதல்வனையே
பன்னப்பணித்த விராமாநுசன் பரன்பாதமுமென்
சென்னித்தரிக்க வைத்தான்* எனக்கேதுஞ்சிதைவில்லையே.
ஊழி முதல்வனையே காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனான எம்பெருமானையே
பன்ன (எல்லாரும் விவேகித்து) அநு ஸந்திக்கும்படி
பணித்த (ஸ்ரீ பாஷ்ய முகத்தாலே) அருளிச்செய்த
பரன் இநாமாநுசன் ஸர்வோத்க்ருஷ்டரான எம்பெருமானார்
புவியில் இந்த பூமியிலே
என்னை ஒரு பொருள் ஆக்கி (அபார்த்தமாய்க் கிடந்த) என்னை ஒரு பதார்த்தமாக்கி
மருள் சுரந்த முன்னை பழை வினை வேர் அறுத்து அஜ்ஞான மூலகங்களாய் மிகவும் அநாதிகளான (எனது) பாவங்களை வேரற நீக்கி
பாதமும் தமது திருவடிகளையும்
என் சென்னி எனது தலையிலே
தரிக்க வைத்தான் நான் உகந்து தரிக்கும் படியாக வைத்தருளினார்; (இவ்வளவு மஹாப்ரஸாதம் பெற்றேனான பின்பு)
எனக்கு அடியேனுக்கு
ஏதும் சிதைவு இல்லை எவ்விதமான ஹாநியும் இனி உண்டாக வழியில்லை.
* * * எம்பெருமானாருடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு ஆளான நான் இனி ஒரு நாளும் எவ்விதமான ஹாநியையும் அடையமாட்டேன் என்கிறார். பதார்த்த கோடியில் சேராமல் துச்சனாயிருந்த எனது கருமங்களையெல்லாம் வேரற நீக்கி, தமது பாதாரவிந்தங்களையும் என் தலைமேலே வைத்தருளினார் எம்பெருமானனர்; இப்பேறு பெற்ற எனக்கு இனி ஒரு குறையுமில்லை என்றாராயிற்று.
மருள் சுரந்த – அஜ்ஞாநத்தாலே செய்யப்பட்ட என்கை; மருளாலே சுரக்கப்பட்ட என்றவாற்; ஊழிமுதல்வனனயே பன்னப்பணித்த – ஊழிமுதல்வனான எம்பெருமானையே பரவும்படி அமுதனாராகிய தம்மைச் செய்தருளின – என்று அர்த்தமல்ல; பகவத்விமுகரா யிருந்தவர்களை யெல்லாம் உபதேசாதி முகத்தாலே பகவத் ப்ரவணராம்படி செய்தருளினவர் என்று பொதுப்படியாகச் சொன்னபடி. ஊழிமுதல்வன் – பிரளயகாலத்தில் முழுமுதற் கடவுளாயிருந்தவன் என்றுமாம்…. (4)