இராமாநுச நூற்றந்தாதி - 18
எய்தற்கரியமறைகளை * ஆயிரமின் தமிழால்
செய்தற்குலகில்வருஞ் சடகோபனை* சிந்தையுள்ளே
பெய்தற்கிசையும்பெரியவர்சீரை யுயிர்களெல்லாம்
உய்தற்குதவும்* இராமாநுசனெம்முறு துணையே
வேதந் தமிழ்செய்த மாறன் சடகோபனையே வாழ்த்தும் ஸ்ரீமதுரகவிகளின் பக்தரான எம்பெருமானார் நமக்கு உற்றதுணை யென்றாராயிற்று. இப்பாட்டில், ஸ்ரீமதுரகவிகள் பெரியவர் என்று சிறப்பித்துக் கூறப்பட்டமை நோக்கத்தக்கது. “புவியு மிருவிசும்பும் நின்னகத்த, நீ யென் செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய் அவிவின்றி, யான் பெரியவன் நீ பெரியை யென்பதனை யாரறிவார், ஊன்பருகு நேமியாயுள்ளு” [பெரிய திருவந்தாதி] என்று பெரிதான பரப்ரஹ்மத்தை உள்ளடக்கின பெரியவரையும் [நம்மாழ்வாரையும்] உள்ளடக்கின பெரியவரிறே மதுரகவிகள்.
எய்தற்கு அரிய மறைகளை | அதிகரிக்க முடியாத (அளவற்ற) வேதங்களை |
இன் தமிழ் ஆயிரத்தால் | இனிய தமிழாலாகிய ஆயிரம் பாசுரங்களினால் |
செய்தற்கு | அருளிச்செய்வதற்காக |
உலகில் வரும் | இவ்வுலகில் வந்துதித்த |
சடகோபனை | நம்மாழ்வாரை |
சிந்தை உள்ளே |
தமது ஹ்ருதயத்தினுள்ளே |
பெய்தற்கு இசையும் | த்யானிப்பதற்கு இணங்கின |
பெரியவர் | ஸ்ரீ மதுரகவிகளுடைய |
சீரை | ஜ்ஞாநாதி குணங்களை |
உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் | ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்குமாறு உபகரித்தருளாநிற்கிற |
இராமாநுசன் | எம்பெருமானார் |
எம் உறு துணை | எமக்கு உற்ற துணை |