இராமாநுச நூற்றந்தாதியின் தனியன்கள்
நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி யிராமானுசமுனி தாளினைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமு தேங்குமன்பால்
இயம்புங் கலித்துறையந்தாதி யோதவிசை நெஞ்சமே.
நெஞ்சமே | மனமே |
நயம் தரு | விஷயங்களால் தரப்படுகிற |
பேர் இன்பம் எல்லாம் | சிற்றின்பங்கள் யாவும் |
பழுது என்று | வ்யர்த்தங்களென்று (அவற்றை விட்டொழித்து) |
நண்ணினர் பால் | தம்மை ஆச்ரயித்தவர்கள் விஷயத்தில் |
சயம் தரு கீர்த்தி | ஸம்ஸார ஜயத்தைப் பண்ணிக் கொடுக்கும் புகழுடையரான |
இராமானுச முனி | எம்பெருமானாருடைய |
தாள் இணை மேல் | இரண்டு திருவடிகள் விஷயமாக |
உயர்ந்த குணத்து திருவரங்கத்து அமுது | சிறந்த குணசாலியான திருவரங்கத் தமுதனார் |
ஓங்கும் அன்பால் | கொழுந்து விட்டோங்கிய பக்தியினாலே |
இயம்பும் | அருளிச்செய்த |
கலித்துறை அந்தாதி | கட்டளக் கலித்துறையினாலமந்த நூற்றந்தாதியை |
ஓத | அத்யாபகம் செய்ய |
இசை | ஸம்மதித்திருக்கக் கடவை |
விஷயாந்தரங்களின் அனுபவத்தினாலுண்டாகும் சிற்றின்பங்கள் யாவும் அற்பங்களென்றும் ஹேயங்களென்றும் கருதி அருவருத்து அவற்றில் நசையற்றுத் தம்மைவந்து அடி பணிகின்ற மஹாநுபாவர்களுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தை அறுத்தருளி மோக்ஷத்தைத் தந்தருள்பவராய் இப்பெரும்புகழ் பரவப் பெற்றவரான எம்பெருமானார் விஷயமாக, பகவத் பாகவத பக்தி முதலிய மஹாகுணங்கள் நிறைந்த திருவரங்கத்தமுதனார் பரம பக்தி தலையெடுத்துச் சொன்ன நூற்றந்தாதி யென்னும் திவ்ய பிரபந்தத்தை ஓதுவதற்கு நெஞ்சே! நீ இசைந்திடாய் என்றார்.
நயம் = விஷயாந்தரங்கள். “நாணாமை நள்ளேன் நயம்” (முதல் திருவந்தாதி) என்ற விடத்து, நயம் என்பதற்கு விஷயாந்தரங்களென்று பொருள் அருளிச்செய்யப்பட்டிருத்தல் காண்க. பேரின்பம் – சிற்றின்ப மென்னவேண்டுமிடத்து பேரின்பமென்றது விபரீதலக்ஷணை.