வேதப்பிரான் பட்டர் அருளிச்செய்தவை.
முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் – என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன் யான்.
முன்னை வினை | முன்னே செய்த பாபங்களெல்லாம் |
அகல | ஒழிவதற்காக |
மூங்கில் குடி அமுதன் | “மூங்கிற்குடி” என்னுங் குலத்திலே தோன்றிய திருவரங்கத்தமுதனாருடைய |
பொன் அம் கழல் கமலப்போது இரண்டும் | பொன்போல் அழகிய பாதாரவிந்தங்களிரண்டையும் |
என்னுடைய சென்னிக்கு | எனது தலைக்கு |
அணி ஆக | ஆபரணமாக |
சேர்த்தினேன் |
பொருந்தவைத்துக் கொண்டேன் |
யான் |
இப்படி அமுதனாருடைய திருவடிகளைச் சூடப் பெற்ற அடியேன் |
தென் புலத்தார்க்கு | தெற்கு திக்கிலுள்ளாரான யமகிங்கரர்கட்கு |
என்னுக்கு | எதுக்காக |
கடவு உடையேன் |
ப்ராப்தி யுடையேன்? |
மூங்கிற்குடியென்ற மஹாகுலத்திலே தோன்றிய திருவரங்கத்தமுதனாருடைய திருவடித் தாமரைகளை நான் சிரோபூஷணமாக அணிந்துகொண்டேன்; அதனால் எனது ஸகல கருமங்களும் தீயினில் தூசாயொழிந்தன. இனி யமனுக்காவது யமபடர்களுக்காவது என்னருகே வருவதற்கு யாதொரு ப்ரஸக்தியுமில்லை; என்றாயிற்று.
“முன்னை வினையகலச் சேர்த்தினேன்” என் இயையும். [மூங்கிற்குடி] வேயர்குலம், ஆஸூரிகுலம், கூரகுலம் என்பன போல மூங்கிற்குடி யென்று ஒரு குலமுண்டாம். கமலப் போது = தாமரைப்பூ, அணி – ஆபரணம். சேர்த்தினேன் = சேர்த்தேன் என்றபடி: இன்--சாரியை.
என்னுக்கு+கடவுடையேன் = என்னுக்கடவுடையேன்; (கடைக்குறை) கெடுதல் விகாரப் புணர்ச்சி. என்னுக்கு = எதுக்காக என்கை; “என்னுக்கவனை விட்டிங்கு வந்தாய்” என்றார் குலசேகரப் பெருமாளும். [கடவுடையேன்.] கடவு = ப்ராப்தி; அதாவது – உரிமை.