இவ்வமுதனார், ஒரு பங்குனித்திங்களில் ஹஸ்த நக்ஷத்ரத்தில் மூங்கிற்குடியில் திருவவதரித்து, திருவரங்கம் பெரியகோயிலில் இருந்ததுவே காரணமாகப் பெரியகோயில் நம்பி என்று ப்ரஸித்தராய் வாழ்ந்துவந்தார்.
[அஷ்டப்பிரபந்தம் செய்தருளினவரும் பட்டர் திருவடிகளில் ஆச்ரயித்து ஊய்ந்தவருமான “பிள்ளைப்பெருமாளையங்கார்” என்பவர்க்கு இவர் திருத்தகப்பனார் என்று சிலரும், பாட்டனார் என்று சிலரும் சொல்லுவர்.]
இவர் ஸகல சாஸ்த்ரங்களையும் அதிகரித்து மஹா நிபுணராய், தமக்குக் குலக்ரமமாகக் கிடைத்த ஸந்நிதி புரோஹித வ்ருத்தியையும் புராணபடந கைங்கர்யத்தையும் பெற்று மிகவும் ராஜஸராய்ச் செருக்குடன் வாழ்ந்துவரும் நாளிலே, உலகங்களை வாழ்விக்கத் திருவனந்தாழ்வானது திருவவதாரமாய்த் திருவவதரித்த எம்பெருமானார் தமது இயற்கையின்னருளாலே இவரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளப்பற்றிக் கூரத்தாழ்வானுக்கு நியமிக்க, ஆழ்வானும் இவரை அநுவர்த்தித்து ஞானச்சுடர் கொளுத்தி எம்பெருமானார் திருவடிக்கீழ்க் கொணர்ந்து சேர்க்க, எம்பெருமானாரும் அவரைக் குளிரக் கடாக்ஷித்தருளி ஆழ்வான் பக்கல் ஆச்ரயிக்கும்படி நியமிக்க, அப்படியே அவரும் ஆழ்வானை ஆச்ரயித்துத் தத்வஹித புருஷார்த்தங்களை ஐயந்திரிபறத் தெளிந்து ஆத்மஆத்மீயங்களை அந்த ஆசார்யன் திருவடிகளிலே ஸமர்ப்பித்துப் பரம ப்ரவணராயிருந்தார். இப்படியிருக்கையில் ஸ்வாசார்யருடைய உகப்புக்கு உறுப்பாகத் தமக்கு ப்ராசார்யரான எம்பெருமானார் விஷயமாக ஒன்றிரண்டு பிரபந்தங்களைச் செய்து அவற்றை எம்பெருமானார் ஸந்நிதியிற் கொணர்ந்துவைக்க, எம்பெருமானாரும் அவற்றை அவிழ்த்துக் கடாக்ஷிக்க, அவை தமது திருவுள்ளத்துக்கு இசைந்திராமையாலே அவற்றைக் கிழித்தெறிந்துவிட்டு அவரை நோக்கி, “நம்மைப் பற்றிப் பிரபந்தம் பாடவிருப்பம் உமக்கிருக்குமாகில், ஆழ்வார்களிடத்தும் உகந்தருளின நிலங்களிடத்தும் நமது ப்ராவண்யம் தோற்றுமாறு ஒரு பிரபந்தம் செய்யும்” என்று நியமித்தருள, இவரும் அப்படியே செய்கிறேனென்று அந்த நியமகத்தை சிரஸ்ரவஹித்து எம்பெருமானார்க்கு ஆழ்வார்களிடத்திலும் திவ்ய தேசங்களிடத்திலுமுள்ள அன்பை நன்கு விளங்கவைத்து இந்தப் பிரபந்தத்தை அருளிச்செய்து எம்பெருமானார் ஸந்நிதியிலேவந்து வணங்கி “இதைக் கேட்டருளவேணும்” என்று பிரார்த்தித்து அநுமதி பெற்றுக் கூரத்தாழ்வான் முதலானோர் பேரோலக்கமாக இருக்கிற அங்குத்தானே இந்தப் பிரபந்தத்தை விண்ணப்பம் செய்ய, எம்பெருமானார் மற்றை முதலிகளோடும் திருச்செவி சார்த்தித் தலைதுலுக்கிப் போரவுகந்தருளி, தம்திருவடிகளில் ஸம்பந்தமுடையோர்க்கெல்லாம் அந்த பிரபந்தத்தை அன்று தொடங்கி என்றும் நித்யாநுஸந்தேயமாம்படி கற்பித்தருளியதுந் தவிர, அவரது வாக்கு அமுதவாக்காயிருந்தமையால் அவர்க்கு அமுதன் என்ற திருநாமத்தையும் பிரஸாதித்தருளி மிகவும் கடாக்ஷித்தருளினார். அகையால் அதுமுதல் “பெரியகோயில் நம்பி” என்ற திருநாமம் மாறித் திருவரங்கத்தமுதனார் என்ற திருநாமம் வழங்கத் தொடங்கிற்று. இப்பிரபந்தத்திற்கு ப்ரபந்ந காயத்ரி என்ற திருநாமமும் அன்றேதொடங்கி நிகழலாயிற்று.
இந்த விருத்தாந்தம் சிறிது மாறுபாடாகவும் சொல்லப்படுவதுண்டு; எங்கனெ யெனின்;- அமுதனார் எம்பெருமானாருடைய நியமனம் பெற்று இப்பிரபந்தம் இட்டருள்வதாக அடையவளைந்தான் திருமதிலுக்கு இவ்வருகேயிருந்த ஒரு தென்னஞ்சோலைத் திருமண்டபத்தில் வீற்றிருந்து பட்டோலைக் கொண்டிருக்கும் போது, அவ்வளவில் எம்பெருமானார் அழகியமனவாளனது நியமனத்தினால் ஆழ்வான், ஆண்டான், எம்பார் முதலிய அந்தரங்கசிஷ்யர்களோடு அவ்விடத்தேயெழுந்தருள அப்போது “செழுந்திரைப்பாற்கடல்” என்ற நூற்றைந்தாம்பாசுரம் தலைக்கட்டி, “இருப்பிடம் வைகுந்தம்” என்ற பாசுரம் எழுதவேண்டிய தருணமாயிருந்ததென்றும், அது முதலான மூன்று பாசுரங்களும் எம்பெருமானார் திருமுன்பே தொடுக்கப்பட்டன வென்றும், பிறகு அரங்கேற்றியானபின் “இந்த விசேஷத்துக்கு ஸ்மாரகமாக இப்பிரபந்தத்திற்கு மாத்திரம் சாற்றுப் பாசுரங்கள் மூன்றாயிருக்கவேணும்” என்று ஆழ்வான் நியமித்தருளினாரென்றும், ஆனதுபற்றியே மற்றைப் பிரபந்தங்கட்கு இரண்டு பாசுரம் சாற்றாயிருப்பதுபோலல்லாமல் இதற்கு மூன்று பாசுரம் சாற்றாக ஸம்ப்ரதாயம் நிகழ்கின்றதென்றும்